Sunday, October 19, 2008

ஒண்ணுமே புரியலே உலகத்திலே....

நேற்று ஒரு நணபருடன் பேசிக்கொ்ண்டு இருந்தேன். நண்பர் ஒரு மருத்துவர், புனே இராணுவ மருத்துவக் கல்லூரியில் பயின்றவர், ISKCON மீது நம்பிக்கையும், பற்றும் உள்ளவர். அவர் சொன்னதிலிருந்து.....

1.ஒரு மனிதனின் ஆன்மா என்பது நிலையானது. அது எப்போதும் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது.
2.ஆன்மா என்பது உடல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
3.ஒரு மனிதன் இறக்கும் போது அது வேறு ஒரு உடலில் சென்று தஞசம் அடைகிறது.
4.உடல் என்பது ஒரு வாகனம், ஆன்மா தான் அதை இயக்கும் ஒரு ஓட்டுனர் .

DNA -கிறது பற்றி சில உண்மைகள்....
20ம் நூற்றாண்டின் இடைவரை யாருக்கும் உயிர் என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? உலகில் ஒரு நாய் ஏன் நாய்குட்டியை உருவாக்குகிறது? ஒரு பூனைக்குட்டியை ஏன் உருவாக்குவதில்லை. என்பது போல பல கேள்விகளுக்கு விடை தெரியாமலிருந்தது. இது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 'திடப்பொருள்'-ன்னு மெண்டல் (கவனம்-'mendal' கொஞசம் தெளிவாகப் படிக்கவும், அவ்ர் ஒரு அறிவாளி, மறை கழன்றவர் 'mental' இல்லை) சொன்னாலும், ஏனோ யாருக்கும் பிடிபடாமல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருந்தது. இது 1950களில் வாட்சனும் கிரிக்கும் அது DNA ன்னு சொல்லி, 'அது' இப்படித்தான் இருக்கும்னு சொல்லும் வரை கண்ணாமூச்சி தொடர்ந்தது. இப்போ நம்ம தலைப்புக்கு வரலாம்..........
1.DNA என்பது நிலையானது, நீங்களோ நானோ இறந்து போனாலும் (ஒரு பேச்சுக்கு வச்சிக்கலாம்......) நம் இருவரின் DNAவும் அழிந்து போவதில்லை. அது ஏற்கனவே வேறு உடல்களில் தஞசம் அடைந்துவிட்டது. (அதாங்க நம்ம குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிட்ட)
2.DNA காலத்தால் அழிவதில்லை (ஹீ ஹீ காதலும் தான்.......) ஒருவரின் DNA வை பிரித்து எடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகும் அது உயிருடன் இருக்கிறது. பல ஆண்டுகள்/நூற்றாண்டுகளுக்குப் பிறகும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும் போது அது தன் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறது. (PCR- Polymerase Chain Reaction தத்துவம்)
3.DNA -50C கடுங்குளிரையும், 190C வெப்பத்தையும் தாங்கவல்லது. இப்பூலகில் முதலில் தோன்றிய உயிர்ப்பொருள் DNA (நியூக்ளிக் அமிலம்).
4.DNA என்பது நம்மை இயக்கும் உந்து சக்தி. இது நம்முடைய எல்லா செல்களின் மத்தியில் மிகவும் பாதுகாப்பாக உட்காந்துள்ளது. நீங்களும் நானும் உருவான நொடி முதல் நம்மை இயக்குவது இது தான். பிறந்தவுடன் அம்மாவைத் தேடி ஒட்டிக்கொள்வதற்கும், பின் "நான் வளர்கிறேனே மம்மி!" ன்னு சொல்லி வளர்வதற்கும் காரணம் இது தான்.
5.வாலிப வயதில் குறுகுறு பார்வைக்கும், அரும்பு மீசைக்கும், பக்கத்து வீட்டு பொண்ணு கோலம் போடுவதை ஒளிஞ்சிருந்து பார்பதற்கும், தெருமுனையிலும், பஸ்ட்டாபிலும் நின்னு சைட் அடிப்பதற்கும் (ஹீ ஹீ இதையெல்லாம் தடுக்க முடியுமா........நம்ம அப்பனுங்க இதெல்ல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ.... சே!), காதலிக்கவும், கல்யாணம் பண்ணவும், அப்பறம் நடக்கும் எல்லா சமாச்சாரங்களுக்கும் காரணகர்த்தா DNA தான்.
6.பின் ஒரு நாள் "அடடே! இவன் மூஞ்சி அவன் அப்பா போலவே இருக்கே, கண்ணு அவன் அம்மா மாதிரி"ன்னு உங்க பையனைப் பார்த்து மற்றவங்க சொல்ல வைப்பதும் DNA தான்.

"அவனின்றி ஒரு அணுவும் அசையாது" - 'அவன்' கறது DNA தானா? வீட்ல சாமி போட்டோவுக்கு பதிலா ஒரு DNA போட்டோ மாட்டி பூஜை பண்ணா எப்படி இருக்கும்?
ஒன்னுமே புரியலே உலகத்திலே.... என்னமோ நடக்குது....மர்மமா இருக்குது.....

பி.கு: DNA-வை பாக்கவும், தேவைப்பட்டால் போட்டோ எடுக்கவும், வசதி இருந்தால் ஒரு குப்பியில் போட்டு, அதை கழுத்தில் தொங்கப் போட்டுக்கவும் முடியும். 'Mr. அவன்'-ஐப் போல ('ம்ஹும்....... உனக்கு நிச்சயம் நரகம் தான்னு' ஒரு குரல் கேட்குது)