Sunday, October 19, 2008

ஒண்ணுமே புரியலே உலகத்திலே....

நேற்று ஒரு நணபருடன் பேசிக்கொ்ண்டு இருந்தேன். நண்பர் ஒரு மருத்துவர், புனே இராணுவ மருத்துவக் கல்லூரியில் பயின்றவர், ISKCON மீது நம்பிக்கையும், பற்றும் உள்ளவர். அவர் சொன்னதிலிருந்து.....

1.ஒரு மனிதனின் ஆன்மா என்பது நிலையானது. அது எப்போதும் அழிவதில்லை, அதை அழிக்கவும் முடியாது.
2.ஆன்மா என்பது உடல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
3.ஒரு மனிதன் இறக்கும் போது அது வேறு ஒரு உடலில் சென்று தஞசம் அடைகிறது.
4.உடல் என்பது ஒரு வாகனம், ஆன்மா தான் அதை இயக்கும் ஒரு ஓட்டுனர் .

DNA -கிறது பற்றி சில உண்மைகள்....
20ம் நூற்றாண்டின் இடைவரை யாருக்கும் உயிர் என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? உலகில் ஒரு நாய் ஏன் நாய்குட்டியை உருவாக்குகிறது? ஒரு பூனைக்குட்டியை ஏன் உருவாக்குவதில்லை. என்பது போல பல கேள்விகளுக்கு விடை தெரியாமலிருந்தது. இது எல்லாத்துக்கும் காரணம் ஒரு 'திடப்பொருள்'-ன்னு மெண்டல் (கவனம்-'mendal' கொஞசம் தெளிவாகப் படிக்கவும், அவ்ர் ஒரு அறிவாளி, மறை கழன்றவர் 'mental' இல்லை) சொன்னாலும், ஏனோ யாருக்கும் பிடிபடாமல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருந்தது. இது 1950களில் வாட்சனும் கிரிக்கும் அது DNA ன்னு சொல்லி, 'அது' இப்படித்தான் இருக்கும்னு சொல்லும் வரை கண்ணாமூச்சி தொடர்ந்தது. இப்போ நம்ம தலைப்புக்கு வரலாம்..........
1.DNA என்பது நிலையானது, நீங்களோ நானோ இறந்து போனாலும் (ஒரு பேச்சுக்கு வச்சிக்கலாம்......) நம் இருவரின் DNAவும் அழிந்து போவதில்லை. அது ஏற்கனவே வேறு உடல்களில் தஞசம் அடைந்துவிட்டது. (அதாங்க நம்ம குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிட்ட)
2.DNA காலத்தால் அழிவதில்லை (ஹீ ஹீ காதலும் தான்.......) ஒருவரின் DNA வை பிரித்து எடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகும் அது உயிருடன் இருக்கிறது. பல ஆண்டுகள்/நூற்றாண்டுகளுக்குப் பிறகும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும் போது அது தன் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறது. (PCR- Polymerase Chain Reaction தத்துவம்)
3.DNA -50C கடுங்குளிரையும், 190C வெப்பத்தையும் தாங்கவல்லது. இப்பூலகில் முதலில் தோன்றிய உயிர்ப்பொருள் DNA (நியூக்ளிக் அமிலம்).
4.DNA என்பது நம்மை இயக்கும் உந்து சக்தி. இது நம்முடைய எல்லா செல்களின் மத்தியில் மிகவும் பாதுகாப்பாக உட்காந்துள்ளது. நீங்களும் நானும் உருவான நொடி முதல் நம்மை இயக்குவது இது தான். பிறந்தவுடன் அம்மாவைத் தேடி ஒட்டிக்கொள்வதற்கும், பின் "நான் வளர்கிறேனே மம்மி!" ன்னு சொல்லி வளர்வதற்கும் காரணம் இது தான்.
5.வாலிப வயதில் குறுகுறு பார்வைக்கும், அரும்பு மீசைக்கும், பக்கத்து வீட்டு பொண்ணு கோலம் போடுவதை ஒளிஞ்சிருந்து பார்பதற்கும், தெருமுனையிலும், பஸ்ட்டாபிலும் நின்னு சைட் அடிப்பதற்கும் (ஹீ ஹீ இதையெல்லாம் தடுக்க முடியுமா........நம்ம அப்பனுங்க இதெல்ல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ.... சே!), காதலிக்கவும், கல்யாணம் பண்ணவும், அப்பறம் நடக்கும் எல்லா சமாச்சாரங்களுக்கும் காரணகர்த்தா DNA தான்.
6.பின் ஒரு நாள் "அடடே! இவன் மூஞ்சி அவன் அப்பா போலவே இருக்கே, கண்ணு அவன் அம்மா மாதிரி"ன்னு உங்க பையனைப் பார்த்து மற்றவங்க சொல்ல வைப்பதும் DNA தான்.

"அவனின்றி ஒரு அணுவும் அசையாது" - 'அவன்' கறது DNA தானா? வீட்ல சாமி போட்டோவுக்கு பதிலா ஒரு DNA போட்டோ மாட்டி பூஜை பண்ணா எப்படி இருக்கும்?
ஒன்னுமே புரியலே உலகத்திலே.... என்னமோ நடக்குது....மர்மமா இருக்குது.....

பி.கு: DNA-வை பாக்கவும், தேவைப்பட்டால் போட்டோ எடுக்கவும், வசதி இருந்தால் ஒரு குப்பியில் போட்டு, அதை கழுத்தில் தொங்கப் போட்டுக்கவும் முடியும். 'Mr. அவன்'-ஐப் போல ('ம்ஹும்....... உனக்கு நிச்சயம் நரகம் தான்னு' ஒரு குரல் கேட்குது)

Wednesday, October 04, 2006

'தி டாவின்சி கோட்'

'தி டாவின்சி கோட்' நாவல் ('புதினம்' என்பது ஒத்த தமிழ் வார்த்தை எனினும், புத்தகம் என்றே பயன்படுத்துகிறேன்.) வெளியான நாள் முதல் அது குறித்த விமர்சனங்களும்,சூடான வாக்கு வாதங்களும் நடந்து வருகின்றன. இது குறித்து சில நூறு பதிவுகளேனும் தேடக் கிடைக்கும். ஆனால் இப்பதிவின் நோக்கம் கர்த்தர் திருமணமானவரா? மேரி மெக்டலின் கடவுளா இல்லையா என்பது அல்ல (சொல்லும் போதே இதயம் ஒரு துடிப்பு ஸ்கிப் செய்யுதே! டான் பிரவுன் யு ஆர் கிரேட்!) . தி டாவின்சி கோட் புத்தகத்தையும் படத்தையும் விவதிப்பதே ஆகும். ஒரு புத்தகம் படமாக வெளிவரும் போது அதில் மிகப்பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும். புத்தகத்தில் ஒரு காட்சியை உருவகப்படுத்தும் போது அதற்கு மிகப் பல பக்கங்கள் தேவைப்படும் ஆனால் அந்த காட்சியை திரைப்படம்மாக எடுக்கும் போது, அது ஒரு சில வினாடிகளில் முடிந்து விடும். மேலும் புத்தக உலகம் என்பது மிகவும் பறந்து விரிந்தது,புத்தகம் வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம், புத்தகம் வாசிப்பவர் (வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வயது, வாழ்க்கை முறை, வாழுமிடம் ஆகியவற்றை பொருத்து கற்பனை செய்து) அனைத்து நிகழ்ச்சிகளையும் மனக்கண் முன்கொண்டுவந்து அந்தக் கதையில் ஆழ்ந்து, படிப்பதனால் அந்த கதை மிகவும் சுவரசியமானதாகவும், அந்த புத்தகம் மிகவும் விரும்பி படிக்கக் கூடியதாகவும் ஆகிறது. மிகச்சில புத்தக ஆசிரியர்களே இவ்வகை புத்தகங்கள் எழுதுவதில் வெற்றியடைகின்றனர். இந்த புத்தகத்தின் ஆசிரியர் டான் பிரவுன் இதில் அமோக வெற்றி பெற்றார் என்றால் அது மிகையாகாது. இதே கருத்தை முன்வைத்து '70களில் எழுதப்பட்ட "The holy grail The holy blood்" என்ற புத்தகமும் இந்த அளவு பரபரப்பை உருவாக்கியது என்றாலும், அது ஒரு நாவல் போல அமையாததால் பரவலான மக்களால் வாசிக்கப்படவில்லை. (தற்ப்போது அந்த ஆசிரியர் டான் பிரவுன் தன்னுடைய கருத்தை திருடிவிட்டர் என IPR் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்) சரி! நாம் நமது விவாததிற்க்கு வருவோம். நான் இந்த புத்தகத்தை முன்பே வாசித்திருக்கிறேன். ஆனால் திரைப்படத்தை குறித்த விமர்சனங்களையும், கருத்துகணிப்புகளையும் வாசித்ததில்லை (அல்லது படத்தை பார்க்கும் வரை படிக்க வேண்டாம் என கருதி வாசிப்பதை தவிர்த்துவிட்டேன் ). எனவெ எனது இந்த பதிவு 'தி டாவின்சி கோட்' பற்றிய என் சொந்த கருத்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
புத்தகத்தை படமாக மாற்றும் முயற்சியில் படத்தின் இயக்குனர் ஓரளவு வெற்றியடைந்துள்ளார். ஏன் ஓரளவே வெற்றி அடைந்துள்ளார் எனில், புத்தகத்தை வாசிக்காமல் படத்தை பார்ப்பவர்களுக்கு பல சந்தற்ப்பங்களில் ஏமாற்றமும், குழப்பமும் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.குறிப்பாக அந்த அல்பினொ (வெள்ளை வில்லனின்) கடந்த காலம் பற்றி கூறும்போதும், படத்தின் நாயகனும் நாயகியும், தொலைந்த உருண்டையை தேடியலையும் போதும், இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். அல்பினோ பாத்திரம், இன்னும் அழுத்தமானதாக காட்டி இருக்க வேண்டும். ஒபல் டை -யின் தன்னை தானே வருத்திக் கொள்ளும் வினோத பழக்கத்தை குறித்தும், அதற்க்கு அவர்கள் பயன்படுத்தும் பெல்ட்கள் குறித்த தகவல்களும் மிஸ்ஸிங்.படத்தின் நாயகி இயேசுவின் வாரிசு என்பதற்க்காகவாவது கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம்.
இருட்டில் ஒளிரும் எழுத்துக்கள் நிஜமாகவே கற்பனைக்கு அப்பாற்பட்டவை. சோஃபியாவின் கார் மனதில் நிற்கிறது.மற்றபடி, கான்ஸ்டன்டின்னின் கொடுமைகளை காட்சி படுத்தியது அருமை. கிப்டிக்ஸ் வேலை செய்யும் விதத்தை கிராஃபிக்ஸ்-ல் காட்டியுள்ளது அற்புதம். ஒரு நாவலை படமாக மாற்றும் போது உள்ள சிரமங்கள் கண்டு படிக்க வேண்டியவை. அதுவும் முழு கதையும் ஒரே இரவில் நடப்பதாக எழுதப்பட்ட ஒன்றை 2 மணி நேரபடமாக மற்றுவதில் இயக்குனர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். இன்னும் சிறிது சுவரஸ்யமாக ஆக்க முயற்சி செய்திருக்கலாம். பெரும்பாலான நேரம் பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். கண்ணைவிடவும் காதுக்கே வேலை அதிகம்!. நம்ம மணிரத்தினத்திடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் புத்தகத்தை முன்பே படித்திருந்தால் தாராலமாக போய் படத்தை பார்க்கலாம், இல்லை என்றால் ஒரு புத்தகத்தை வாங்கி (மெனக்கெட்டு) அதை படித்து விட்டு பின் போய் பாருங்கள்!. குறைந்த பட்சம், புத்தகத்தை வாசித்தவர் யாராவது இருந்தால் இரு அரை மணி நேரம் கதை கேட்டு விட்டு போய் பார்க்கலாம். இல்லை என்றால் டிக்கெட் வாங்கிய காசு 'விரலுக்கு இரைத்த நீர் தான்' (உனக்கு இது தேவையா "வீண்" ணு சொல்லிட்டு போறத விட்டுட்டு. :-))
testing testing.........first post